எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட திரைப்படம் வாடிவாசல். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஆனால் இப்படத்தின் பற்றிய அப்டேட் தொடர்ந்து வெளியாகாமலே இருந்தது. பின்பு கடந்த 2022ஆம் ஆண்டு சூர்யா பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் மீது முழு கவனம் செலுத்தியதால் வாடிவாசல் படம் தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சூர்யா ஏற்கனவே இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் கமிட் ஆகி பிறகு அப்படத்திலிருந்து விலகினார். அதே போல் வாடிவாசல் படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டதாகத் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு ஆங்கில ஊடகத்தில், “இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறியிருந்தார். இதையடுத்து வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில், இப்படத்தின் காளை சம்பந்தமான காட்சிகளுக்கு வி.எஃப்.எக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறியிருந்தார். மேலும் அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் எஸ்.தாணு வாடிவாசல் படம் குறித்த சில அப்டேட்டுகளை கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த மாதம் 5ஆம் தேதி வெற்றிமாறன், சூர்யா ஆகியோருடன் இணைந்து படத்தை எப்படி எடுக்க வேண்டுமென கலந்து ஆலோசித்தோம். அதன்படி படத்திற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக மதுரையில் அலுவலகம் அமைத்து, பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. படம் உருவாவதில் ஏன் இவ்வளவு தாமதமென்றால், படத்தில் பெரிய ரிஸ்க் உள்ளது. இதற்கு முன்பு மூன்று நாள் படம் எடுத்தோம்.
அதிலிருக்கக்கூடிய ஆபத்துகள் நடிக்கக் கூடிய கலைஞர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக லண்டனில் ஜுராசிக் பார்க் படத்திற்கு பயிற்சியளித்த ஜான் என்பவரிடம் இப்படத்தின் கதையைச் சொல்லி அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதனால்தான் படத்திற்குத் தாமதம். மற்றபடி படப்பிடிப்பு ஆரம்பித்து எந்தவித தடங்களுமின்றி நடைபெற்று வருகிறது” என்றார். மேலும் படப்பிடிப்பு நின்றுபோனதாக வெளிவந்த தகவலுக்கு அவர் பதிலளிக்கையில் “யூகத்திற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து நிமிடம் எதாவது பேசி ஆகவேண்டும் என்பதற்காக ஹைலைட்டாக இருக்ககூடிய வாடிவாசல் படத்தைப் பற்றி அல்லவையும் சொல்லுவார்கள், நல்லவையும் சொல்லுவார்கள், அதனால் அதைத் தவிர்த்துவிடுவோம்” என்றார்.