66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் விருது வழங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் பாரம் என்றொரு சுயாதின படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மஹாநடி படத்தில் சாவித்ரியாக நடித்ததற்கு கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த வருடத்தில் நிறைய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமாக்களுக்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலிவுட்டில் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்ற படம் அந்தாதுன். இப்படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் வெளியான சிறந்த படமும் அந்தாதுன் படத்திற்குதான் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடாப்டட் ஸ்கீரின் பிளேவும் இந்த படத்திற்குதான் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்து எந்தவித சர்ச்சையும் எழவில்லை. ஆனால், உரி படத்திற்கு கிடைத்துள்ள விருதுகள் உண்மையிலேயே நியாயமாக வழங்கப்பட்டுள்ளதா என்று பலரும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய ஆர்மி நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றியான கதைதான் உரி. படமளவில் நன்றாகவே இருக்கும், வட இந்தியாவில் பலரும் இந்த படத்தை பாராட்டி பார்த்தனர். வசூல் ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்திற்கு மூன்று விருதுகள் அதிலும் இரண்டு விருதுகள் முக்கியமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குனர் ஆதித்யா ராய்க்கும், சிறந்த நடிகருக்கான விருது விக்கி கவுசலுக்கும் வழங்கப்பட்டுள்ளது, பின்னணி இசைக்கும் இந்த படத்திற்குதான் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை சிறந்த நடிகர் விருதை ஆயுஷ்மான் குரானாவும், விக்கி கவுசலும் பகிர்ந்துக்கொள்கின்றனர்.
சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குனருக்கான விருதும் இந்த படத்திற்கானவையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட வீரர்களை பெருமைபடுத்தும் விதமாக இந்த படம் இருந்தாலும் இவ்விரு விருதுகளும் பாஜகவின் அழுத்ததாலே கொடுக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளத்தில் விவாதம் நடைபெறுகிறது.