இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்டிக்கள் 15 படத்தை தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளிலும் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய உதயநிதி, "இதே மாதிரியான ஒரு மேடையில் நான் மாமன்னன் படத்திற்கு பிறகு நடிக்க போவதில்லை என கூறியிருந்தேன். அது மிகப் பெரிய செய்தியாக வலைத்தளத்தில் பரவியது. நிறைய பேர் கேட்டாங்க ஏன் நடிப்பை நிப்பாட்டுரிங்க என்று கேட்டார்கள். அதனால இப்போ மாமன்னன் படத்திற்கு பிறகும் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். எனக்கு தெரிஞ்சு அந்த படத்தை அருண்ராஜா காமராஜ் தான் இயக்குவார் என்று நம்புறேன். அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்துட்டு இருக்கு. அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பெரிய அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் தான் இந்த படம் இந்தளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் நடிகர் உதயநிதிக்கு தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார்.