தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் திருப்பூரில் ஸ்ரீ சக்தி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கையும் நடத்தி வருகிறார். இதில் கடந்த தீபாவளியன்று சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படம் அரசு அனுமதியின்றி திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், அரசு அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்திய போது, அனுமதியின்றி 6 சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திரையரங்க உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், திடீரென்று திருப்பூர் சுப்ரமணியம், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சங்க செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.