கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', விக்ரம் பிரபுவின் 'ரெய்டு', சல்மான் கானின் 'டைகர் 3' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இதில் தமிழகத்தில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டதால் தமிழக அரசு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 1.30 மணிக்கு முடிக்க அனுமதி வழங்கியது. அதன்படி காட்சிகள் திரையிடப்பட்டது.
ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான, திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், சல்மான் கானின் 'டைகர் 3' படம் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி 6 சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திரையரங்க உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.