Skip to main content

“நஷ்டமடைய நஷ்டமடையத் தொழில் வீணாய்ப் போகிறது. ஆகையால்..” -திருப்பூர் சுப்ரமணியம்!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

கரோனா அச்சுறுத்தலால் கடந்த 100 நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. மேலும், மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இனி எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியப்படவில்லை. இதனிடையே, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்வது குறித்தும், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

 

ஜூம் செயலியின் மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறுகையில், “கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒற்றுமையாகக் கலந்து பேசினோம்.

 

தயாரிப்பாளர்கள் கூறும் கருத்துகளுக்கு நாங்கள் செவி சாய்க்கிறோம் என்று சொன்னோம். நாங்கள் கூறிய கருத்துகளுக்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். திரைத்துறையின் சார்பில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளைத் தயார் செய்து அரசாங்கத்திடம் கொடுக்கவுள்ளோம். இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சரையும், ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக நிதியமைச்சரையும், அவர்கள் இருவரின் மூலமாக முதல்வரையும் சந்தித்துக் கோரிக்கை வைக்கவுள்ளோம்.

 

திரையரங்குகள் சிறப்பாகச் செயல்பட்டால் தொழில் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் செழித்து வளர்ந்தால் மட்டுமே இந்தத் தொழில் நன்றாக இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம் என்று ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது. கோரிக்கைகளைத் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரதிராஜா சார் தேனியில் இருக்கிறார். அவர் சென்னை வந்தவுடன் செய்தித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் சந்திக்க நேரம் வாங்கி, "நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தக் கோரிக்கைகளைச் செய்து கொடுங்கள்" என்று வலியுறுத்தவுள்ளோம்.

 

திரைத்துறையினர் ஒற்றுமையாகப் போய் என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த காலம் எல்லாம் மறைந்துபோய், எல்லாருமே ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய நஷ்டமடையத் தொழில் வீணாய்ப் போகிறது. ஆகையால், தயாரிப்பாளர்கள் என்ன கேட்டாலும் செய்து தருகிறோம் என்று கூறியுள்ளோம். நமக்குள் உள்ள பிரச்சினையை உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றோம். அதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

 

http://onelink.to/nknapp

 

அதேபோல் இயக்குனர் எஸ்.ஏ.சி. சாரும் பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்தக் கோரிக்கைகள் நல்லபடியாக நிறைவேறும் வரை காழ்ப்புணர்ச்சியைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று கூறினார். அதைத்தான் இயக்குனர் பாரதிராஜா சார், சத்யஜோதி தியாகராஜன் சார் உள்ளிட்ட அனைவருமே கூறினர்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட் vs மோலிவுட்; எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சரமாரி கேள்வி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Kerala's famous writer unni asked writer Jeyamohan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது குணா குகை. இந்தக் குகையைக் கண்டறிந்த ஆங்கிலேயேர்கள் இதற்கு டெவில் கிச்சன் என பெயர் சூட்டினர். மிகவும் ஆபத்தான இந்தக் குகையில், கடந்த 33 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த குணா என்ற திரைப்படம் உருவானது. அதன் பிறகே, டெவில் கிச்சனாக இருந்த இந்தக் குகை, குணா குகை எனப் பெயர் பெற்றது.

இந்தக் குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் `மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்தத் திரைப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் எனப் பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அவர், அதனை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி. ஆனால் 'யானை டாக்டர்' எழுதியவன் என்கின்ற முறையில் இதை எழுத வேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துகள் வழியாக நேற்று 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என அந்தக் கட்டுரையை ஆரம்பித்த எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இவர்கள் சுற்றுலா மையங்களுக்கு மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி..குடி..குடி.. அவ்வளவுதான். எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். என அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கேரளா மட்டுமல்லாது தமிழ் சினிமா துறையில் இருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் பலர் சமூக வலைத்தளங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவின் பிரபல எழுத்தாளரான உண்ணி, ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மலையாள மனோரமாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் அவ்வளவு விஷமத்தனம் உள்ளது. குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற வாதம் மேட்டுமைத்தனத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்க, இதனை ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே சிலர் பார்க்கிறார்கள். இந்த ஆதிக்க உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின் இருக்கும் உண்மை.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடித்தட்டு வாழ்க்கை வாழும் நண்பர்களின் கதை. படத்தில் அவர்கள் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்டினாலும், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றிய மனிதாபிமானம் இந்த ஆசாமி கண்ணில் ஏன் படவில்லை. இயற்கையின் சீற்றத்தால், பிரச்சனை ஏற்பட்ட போது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும் இருந்தார்கள் எனவும் சாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அந்தக் கட்டுரையின் இறுதியில் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில், கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதா?... உங்களுக்குள் இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு?... உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?... கேரளத்துக்கு கதை எழுத வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதலா இந்த வசை மாரி?... உள்ளிட்ட காட்டமான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் இப்படி விமர்சனம் செய்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.