திரையரங்குகள் தொடர்பாகத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இதன் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரண்டு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகும் கால அவகாசத்தை 8 வாரங்களாக அதிகரிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசவுள்ளோம். 8% லோக்கல் வரி விதிப்பிற்கு தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை வைக்கவுள்ளோம். பராமரிப்பு வசதிகளுக்கு ஏசி திரையரங்கத்திற்கு ரூ.10, ஏசி அல்லாத திரையரங்கிற்கு 5 ரூபாய்க்கும் செய்து கொடுக்க அரசாங்கத்திடம் கேட்கவுள்ளோம்.
முன்னதாக படம் ரிலீஸாகும் சமயத்தில் பட விநியோகம் செய்யும் நிறுவனத்திடமிருந்து அனைத்து திரையரங்கிற்கும் ஆட்கள் வருவார்கள். ஆனால் இப்போது ஃபோனில் மட்டுமே தொடர்பு கொண்டு வசூல் விவரங்களை கேட்கின்றனர். அந்த ஆட்களுக்கு பேட்டா கொடுக்க வேண்டிய முறை இருந்து கொண்டு வருகிறது. அதை ரத்து செய்ய தயாரிப்பாளர்களிடத்தில் கேட்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தவுள்ளோம்.
தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் பங்கு தொகையான 80 சதவீதத்தை குறைத்து அதிகபட்சம் 60 சதவீதம் கொடுக்க முடிவெடுத்துள்ளோம். திரையரங்கில் நிகழ்ச்சி, திருமணம், விளையாட்டு உள்ளிட்டவை ஒளிபரப்ப கோரிக்கை வைக்கவுள்ளோம்” என்றார்.