இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது.
அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது, இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது.
இதில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்காதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு நானி, சுசீந்திரன், பி.சி. ஸ்ரீராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் அவரிடம் இதுகுறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, "நடிகர் பிரகாஷ் ராஜ் இதற்கு அருமையாக பதில் சொல்லியிருக்கிறார். காந்தியை கொன்றவர்கள் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்குவார்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார். அதையே நான் வழிமொழிகிறேன்" என்று பதிலளித்தார்.