திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல தரப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.