![suseenthiran about 2k kids relationship](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y-I-RclhSxxlU49zdzyJRQJ9tp_wYAzeIdiRgkTjjsE/1739021195/sites/default/files/inline-images/248_15.jpg)
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி’. இப்படம் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் கதையாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இதன் மூலம் சுசீந்திரனும் இமானும் 10வது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். அப்போது சுசீந்திரனிடம் ட்ரெய்லரில் இடம்பெற்ற ‘காதலுக்கு முன்பு காமம் தான் முதலில் வரும்’ என்ற வசனம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுசீந்திரன், “ஒரு மனிதனாக காதல் வருவதற்கு முன்னாடி காமம் தான் முதலில் வரும். அது ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே அப்படிதான். அதைத் தான் படத்தில் சொல்கிறோம். இந்த உலகம் பார்க்கிற மாதிரி எங்களை ஏன் வாழ சொல்றீங்க. நாங்க ஃபிரண்ட்ஸ்... இப்படிதான் படத்தில் கதாநாயகன் சொல்வார். மேலும் இத்தனை வருஷம் உன்கூட பழகுறேன். உன்கூட அப்படிப்பட்ட எண்ணமே வந்ததில்லை என சொல்வார்.
எல்லா காலகட்டத்திலும் எல்லா விதமான உறவுகள் இருந்து கொண்டே வருகிறது. அதற்கு இப்போது ஒரு பெயர் வைத்திருக்கிறோம். க்ரஷூக்கு உண்மையான அர்த்தம் காமம் தான். காமத்திற்கு பிறகுதான் காதலும் வரும், காமத்திற்கு பிறகுதான் கல்யாணமும் நடக்கும். இப்போது மீடியா வலிமையாக இருப்பதால் 2கே காலத்து பசங்கள்தான் நிறையக் கெட்டுப் போகிற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கிறோம். எல்லா காலகட்டத்திலும் பாசிட்டிவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது இந்த 2கே காலத்திலும் தொடர்கிறது. அதைத்தான் இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறேன்” என்றார்.