Skip to main content

“நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன்” -சூர்யா

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
surya

 

 

நீட் நுழைவு தேர்வு அச்சத்தால் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது பெரும் பீதியை கிளப்பியது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் அதில், “கரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்றும் கூறியிருந்தார்.

 

இதனிடையே, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதினார்.

 

அந்த கடிதம் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தனது முடிவை அறிவித்தது. தன்னளவில் சரியாக நடந்து கொள்வதாக கூறும் சூர்யா போன்றவர்கள், நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா, இல்லையா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

 

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, “இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது. நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்