Skip to main content

"அனைவருக்கும் தலை வணங்குகிறேன்" - சூர்யா

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

suriya tweet about jallikattu court judgement

 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதன்பின்பு ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீக்கக் கோரி மாபெரும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன் விளைவாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

 

இதனிடையே பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்தது. மேலும் ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதனை பட்டாசு வெடித்து தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், "6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன். தமிழர் ஒற்றுமை வென்றது" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், "தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறு தழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்துக்கும் கம்பலா கன்னட கலாச்சாரத்துக்கும் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும் படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. மாநில அரசுக்கு வாழ்த்துக்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 'கங்குவா' படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக ஜல்லிக்கட்டை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.