இயக்குநர் அசோக் தியாகி 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். கடந்த 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றதற்கான காரணத்தை விளக்கி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை படக்குழு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. நாதுராம் கோட்சேவை ஹீரோவாக சித்தரித்துள்ள இப்படம் வெளியானால் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதுடன் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், அது மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்தி, அவரைக் கொன்ற கோட்சேவை புனிதப்படுத்தும் எனவே இந்த படத்தை தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' படத்தை வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.