அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியான பின்பு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிலிருந்து ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் மார்வெல் யுனிவர்ஸின் 23வது படம் ஆகும். இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 1.1 பில்லியன் டலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 375 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
சோனி நிறுவனம் தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலை குவித்துள்ள பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது. இதனால் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வசூலை 400 மில்லியன் டாலர்களாக(இந்திய மதிப்பில் 2870 கோடி) உயர்த்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக நான்கு நிமிட காட்சியை இப்படத்தில் சேர்த்துள்ளதாம்.
வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட திரையரங்களில் ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியாகிறது.
இதற்கு முன்பு வெளியான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திலும் வசூலை அதிகரிக்க வேண்டி சில காட்சிகள் சேர்க்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.