Skip to main content

“என் அண்ணன் கூட என் மீது அவ்வளவு ஆசை வைக்கவில்லை...”- கதறி அழுத கங்கை அமரன்!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020
gangai amaran

 

 

பிரபல பாடகர் எஸ்.பி.பி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவிற்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தாமரைபாக்கத்திலுள்ள அவரது பண்ணையில் நல்லடக்கம் செய்யப்பட்டார் எஸ்.பி.பி.

 

இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை எஸ்.பி.பிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மயில்சாமி, இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

இயக்குனர் கங்கை அமரன் வீடியோ பதிவின் மூலம் பேசியிருந்தார். அதில், “எஸ்பிபி போவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எனக்கு ஆரம்பிச்சுடுச்சு. என்னமோ நடக்கப் போகுதே என்ற உணர்வு. எஸ்பிபிக்கு நெருங்கிய நண்பன் என்பதை எல்லாம் கடந்து பிரம்மாண்டமான ஆள். எவ்வளவு சாதனை செய்த ஒரு ஆள். ரொம்ப எளிமையாக நடந்து கொள்ளக் கூடிய ஒரு மனிதர். அவர் இல்லை என்பதை என்னால் தாங்க முடியவில்லை.

 

நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டாலும், தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் வீட்டில் இருப்பவர்கள் இங்கு தானே வருவார், உட்காருவார் என்று நினைப்பீர்கள். அதனால் உங்களுக்கு எல்லாம் எப்படி ஆறுதல் சொல்லுவது எனத் தெரியவில்லை. தயவு செய்து அதிலிருந்து மீண்டு வாருங்கள். என் அண்ணன் கூட என் மீது அவ்வளவு ஆசை வைக்கவில்லை. அவ்வளவு ஆசை வைத்திருந்த என் நல்ல நண்பனை இழந்து அவ்வளவு வருத்தப்படுகிறேன்.

 

நானே இவ்வளவு வருத்தப்படும் போது, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும். நாங்கள் எப்படியாவது தேறி வந்துவிடுவோம். குடும்பத்தினர் தினமும் பதறாமல் இருங்கள். ஆறுதல் அடையுங்கள். நம்ம கூடவே தான் இருப்பான் பாலு. பகல் எல்லாம் அவனுடைய நினைப்பாகவே இருந்தேன். இரவு எல்லாம் தூக்கம் வராமல் அழுது கொண்டிருந்தேன்.

 

ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கனவில் வருவார்கள் என்று சொல்வார்கள். அந்த கனவு வரும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், அதிலாவது அவனைப் பார்க்கலாமே என்று. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். நானும் ஆறுதல் ஆயிடுறேன்.. ஆயிடுறேன்... ஆயிடும்... ஆயிடும். என் நண்பனை இழந்துவிட்டேனே. அவர் உயிருடன் பக்கத்திலேயே இருப்பது போல் நினையுங்கள்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்