செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி கார் ஓட்டுநர் சரவணன், காரில் பயணித்த ஜெய்பினிஷா மற்றும் அவரது மகன்கள் மிஷால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர். வெளிநாடு செல்லும் தனது கணவரை வழியனுப்பி வைத்துவிட்டு ஜெய்பினிதா என்பவர் தனது குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜெய்பினிதாவின் மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். வழியில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (15.5.2024) அதிகாலை தனக்கு முன்னதாகச் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் அப்துல் அமீர் மனைவி ஜெய் பினிஷா (வயது 40) மற்றும் அவரது மகன்கள் பிஷால் (வயது 20), சிறுவன் பைசல் (வயது 12) மற்றும் ஒட்டுநர் சரவணன் (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அக்தர் (வயது 16) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.