ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அரங்கேறி வருகிறது. ராஷ்மிகா, கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதே சமயம் மறைந்த பாடகரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் கொண்டு வந்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான், லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, 'திமிறி எழுடா' பாடலில் பயன்படுத்தியிருந்தார்.
அவர்களின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலை ஏ.ஐ. மூலம் ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரு பேட்டியிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எஸ்.பி.பி குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் அனுப்பியுள்ளார்.
அவர் நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாவது, “எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.