உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் இயக்குனர் எஸ்.பி.ஜனனாதன் தற்போது அறிவித்துள்ள முழு ஊரடங்கு குறித்து சமூக ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''மக்களை தாக்கி வரும் கரோனா வைரஸ் மனிதர்களின் தொடுதல் மூலம் பரவுகிற குணத்தை கொண்டிருக்கிறது. இது முற்றிலும் புதுமையானது. இதனை மருத்துவ உலகம் எதிர்த்து போராடி வருகிறது. நிச்சயம் மருத்துவம் வெல்லும். இதுபோன்ற நேரத்தில் அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. கரோனா ஊடரங்கு பிறப்பிப்பற்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்துதான் மக்களை வீட்டுக்குள் அடைத்தது அரசு. அதன் பிறகு முழு ஊரடங்கு என்று சொல்லி, மதியம் இரண்டு மணிக்குள் நான்கு நாளுக்கு தேவையான பொருட்களை வாங்க மீண்டும் மார்கெட்டுகளிலும், கடைகள் முன்பும் சென்னை மக்கள் பெரும் திரளாக கூடினார்கள். முதல்வர் அறிவித்த எக்ஸ்ட்ரா இரண்டுமணி நேர அவகாசமும் யாருக்கும் தெரியவில்லை.
இது எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை என்று புரியவில்லை. பல நாள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த மக்களை ஒரே நாளில் கூட்டத்திற்குள் நுழைத்து அந்த பல நாள் பலனை ஒரு நாள் கெடுக்கிற பணிதான் நடந்தது. இதற்கு முன்பு சுனாமி ஏற்பட்டபோது அது அந்தமான் நிக்கோபார் தீவின் கிழக்கு கடற்ரையை தாக்கி அதன் பிறகு 2 மணி நேரத்திற்கு பிறகுதான் இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கியது. இந்த 2 மணி நேரத்தில் அரசு சுதாரித்து உயிர்பலியை குறைத்திருக்க வாய்ப்பு இருந்ததாகவே நான் கருதுகிறேன். கடந்த கால தவறுகளை தவிர்த்து இந்த முழு அடைப்பு நீடிக்குமா இல்லையா, நீடித்தால் கடைகள் திறந்திருக்கும் நேரம் இவைகளை நாளைக்கே அறிவித்தால்தான் மீண்டும் மக்கள் ஆயிரக் கணக்கில் பதட்டத்துடன் கூடுவதை தவிர்க்க முடியும். அதை அரசு செய்யுமா என்பதே என் எதிர்பார்ப்பு'' என குறிப்பிட்டுள்ளார்.