இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள் என இசைத்துறையில் வரலாறு படைத்துள்ளார்.
எஸ்.பி.பி. மறைந்து நான்கு ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் 4 ஐ உயரம் கொண்ட மார்பளவு உருவச்சிலை கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.சரண் முதல்வர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
எஸ்.பி.பி-யின் நினைவை போற்றும் வகையில் அவர் வசித்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என மாற்ற வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பி-யின் நான்காம் ஆண்டு நினைவு நாள் வருகிற 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.