Skip to main content

ஒரு ஓட்டுக்கு ரூ.5000... பொதுத் தேர்தலை மிஞ்சும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் நாசருடன் இணைந்து விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட்டனர். வழக்கத்திற்கு மாறாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் பொதுத் தேர்தலை போல ஊடக கவனம் பெற்றது. இதனை அடுத்து நாசர் அணி நடிகர் சங்க கட்டிடப் பணிகளை முடித்துவிடுவோம் என்று உறுதியளித்தது. ஆனால், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவரானது என்று பல அதிருப்திகள் இந்த அணி மீதும் உள்ளது. தற்போது நடிகர் சங்க கட்டிடம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொருளாளர் கார்த்தி தன்னுடைய பணம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து கட்டிடப் பணிகளை முடிக்க உதவியுள்ளார்.
 

bagyaraj

 

 

இந்நிலையில் இந்த அணியின் பதவி காலம் கடந்த வருடம் அக்டோபர் மாதமே முடிவடைந்துவிட்டது. ஆனால், கட்டிடப் பணிகள் முடிவடையும் வரை தேர்தலை தள்ளி வைக்கிறோம். அடுத்த ஆறு மாதம் கழித்து நடிகர் சங்கத் தேர்தலுக்கான தேர்தல் நடைபெறும் என்று நாசர் அணி அறிவித்தது. இதனையடுத்து 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 

டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
 

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
 

இந்நிலையில் பாண்டவர் அணியின் மீதுள்ள அதிருப்தியால் அவர்களை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
 

கடந்தமுறை பொதுத் தேர்தலைபோல கவனம் பெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இம்முறையும் பொதுத் தேர்தலைபோல பணப்பட்டுவாடா நடக்கும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரத்திற்கு மேல் பணம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்