நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. 2018 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இளைஞர் ஒருவர் சிவகுமாரிடம் செல்ஃபி எடுக்க வந்த நிலையில், அந்த செல்ஃபோனை கோபமாகத் தட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பின்பு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட அவர், அந்த இளைஞருக்கு புது செல்ஃபோனும் வாங்கிக் கொடுத்தார்.
இதேபோல், 2019ல் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்க வந்த ஒரு இளைஞனின் செல்ஃபோனை தூக்கி எறிந்தார். இதுவும் பரவலாகப் பேசப்பட சிவகுமாரின் செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் அரசியல்வாதியும் எழுத்தாளருமான பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். காரைக்குடியில் நடந்த இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த சிவகுமார், மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீருக்காகப் போராடி வழக்கை சந்தித்தவர் எனப் புகழாரம் சூட்டி, பழ. கருப்பையா காலில் விழுந்து வணங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிவகுமார் கீழே இறங்கி வந்து கொண்டிருக்கையில் வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்துவிட்டார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.