ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சிவகுமார், "உங்களுக்கெல்லாம் சூர்யா, கார்த்தி அப்பாவாகத் தான் என்னை தெரியும். அவர்கள் பிறப்பதற்கு முன்பாக உங்களை மாதிரி தான் நானும் இருந்தேன். உங்களவுக்கு கொடுமையாக இல்லை என்றாலும் அதுவும் கொடுமையான வாழ்க்கை தான். அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எங்க அப்பா பற்றி எதுவும் தெரியாது. நான் பிறந்த 10 மாதம் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார். ஊர்ல படிச்சவங்க யாரும் கிடையாது. பள்ளிக்கூடமும் இல்லை. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அண்ணன், எனக்கு 4 வயது இருக்கும் போது இறந்துபோயிட்டான். ஊரில் மலை பெய்யாததால் ராகி, கம்பு என அதுவும் விளையவில்லை.
மழைபெய்யவில்லை என்றாலும் எருக்கஞ்செடியும், அரளிவிதையும் தயாராக இருக்கு. புருஷனும் போய்விட்டான், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அண்ணனும் போய்விட்டான்... அப்போது சிறிதாக அரளிவிதையை அரைச்சு எங்களுக்கு கொடுத்திருந்தால் அப்பவே முடிஞ்சிருக்கும். அந்த பாவி மகள் விட்டுவிட்டு போனதனால் தான்..." என பேசிக்கொண்டே இருக்கும்போதே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். அதை பார்த்த சூர்யாவும், கார்த்தியும் துயரத்துடன் உட்கார்ந்திருந்தனர். பின்பு சமாதானமாகி பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்தார்.