நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், மூத்த பின்னணி பாடகர் மனோ கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துவிட்டேன். தயவுசெய்து உங்களுக்கான தடுப்பூசிகளை தவறவிடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். மாஸ்க் அணியுங்கள். கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துங்கள். மிக முக்கியமாக தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். மனிதகுலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த யுத்தத்தை நாம் ஒன்றாக எதிர்த்துப் போராட முடியும்" என கூறியுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.