சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து திவ்யா "தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கரு கலையும் அபாயம் இருப்பதாகவும்" ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் ஒரு வீடியோ வெளியிட்டு அர்னவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். பின்பு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து அர்ணவ், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்பு செய்தியாளர்களிடம், "தான் திவ்யாவை அடித்து துன்புறுத்தவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருக்கிறது. தன்னுடைய குழந்தையைக் கருக்கலைப்பு செய்யும் எண்ணத்துடன் திவ்யா செயல்படுகிறார்" எனக் கூறியிருந்தார். பின்பு சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்னவ் மீது திவ்யா புகார் கொடுத்திருந்தார். மேலும் "அர்னவ், அவருடன் சீரியலில் நடித்து வரும் அன்ஷித்தா என்ற நடிகையுடன் நெருங்கி பழகி வருகிறார். இதற்கு எல்லாம் அந்த நடிகை தான் காரணம்" என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து பேட்டி கொடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் அர்ணவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் அர்னவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அர்ணவின் வக்கீல்கள், அர்ணவிற்கு ஜாமீன் வேண்டுமென பூந்தமல்லியில் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. பூந்தமல்லி நீதிமன்ற மாஜிஸ்திரேட் இல்லாத காரணத்தால் இந்த மனுவை அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி விசாரித்தார். அப்போது விசாரணையில், திவ்யா தற்போது கர்ப்பமாக இருப்பதால். அவர் கருவைக் கலைத்து விட்டுத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவரை தான் பார்த்துக் கொள்வதாகவும் அர்னவ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஜாமீனில் அர்னவ் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க கூடும் என திவ்யா தரப்பில் வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் அர்ணவின் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.