Skip to main content

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்

Published on 18/11/2022 | Edited on 19/11/2022

 

seeman supports vijay for varisu movie theatre issue

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

 

இப்படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு சிக்கல் ஏற்படும் வகையில்  தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில்  சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

தயாரிப்பாளர் தில்ராஜு 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் வெளியிட அதிக திரையரங்குகளைக் கேட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் 'வாரிசு' படம் தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் படத்திற்கு ஆதரவாக "தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்" எனக் கூறியுள்ளார். 
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத் திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த் திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.

 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த்திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேரடித் தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாயினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்ச போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.

 

ஆகவே, தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில், தெலுங்குத் திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்" உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.