சத்யராஜ் நடிப்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் மொட்டை ராஜேந்தர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு படத்தின் இயக்குநர் அலெக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் அனிஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது சத்யராஜ் பேசுகையில், “நான் இதுவரை 250 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய படங்கள் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் நடிப்பு என்ற பணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அதில் பெருமைக்குரிய வகையில் நடித்தது தந்தை பெரியாராக நடித்ததுதான். சில பெயர்களை தாங்கி நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும், அதுபோல எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தில் நான்தான் எம்.ஜி.ஆர்-ராக நடித்தேன். ஆனால் தோழர் சேகுவேராவுடன் என்னை எந்த வகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏற்கனவே தோழர் சேகுவேரா கெட்டப்பில் ‘புரட்சிக்காரன்’ என்ற படத்தில் நடித்துள்ளேன். ஆனால் அந்த பேரில் நடிப்பது என்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றுதான்.
இப்படத்தின் கதையை திருமாவளவனிடமும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடமும் படக்குழு சொல்லியிருக்கிறது. அப்போது தோழர் சேகுவேரா என்ற கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்? என்று கேட்டதற்கு அவர்கள் இருவரும் சத்யராஜ்தான் சொல்லியிருக்கின்றனர். அதோடு நான் நடித்தால் வெறும் நடிப்பாக இருக்காது உள்ளார்ந்து வரும் செயலாக இருக்கும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் நடிக்கும்போது தம்பி அலெக்ஸை சின்ன பையன் என்று நினைத்தோம். ஆனால் ட்ரைலரில் வரும் சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசமாக நடித்துள்ளார். அவர் வாழ்க்கையில் நடந்த பாதிப்புகளை கோபமாக வெளிப்படுத்தியுள்ளார். வி.சி.க. கட்சியில் இருக்கிற அடங்க மறு அத்துமீறு என்ற முழக்கம் அவருக்குள் உள்ளது.
அதன் பிறகு இந்த படத்தில் என்னை ‘அடங்கமறு அத்துமீறு...’ என்ற பாடலை பாடச் சொன்னார்கள். இந்த பாட்டை நான் நன்றாக பாடிவிட்டால் வி.சி.க. மேடைகளில் இந்த பாடல் ஒலிக்கும் என்று சந்தோஷம் எனக்குள் இருந்தது. இந்த பெருமைக்குரிய புரட்சிகரமான பாடலை பாடியதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த பாடலில் புரட்சி தமிழன் என்ற வார்த்தை வரும்போது என்னை காட்டுகிறார்கள், அதுதான் வருத்தமாக உள்ளது. நான் தமிழன் அவ்வளவுதான். இந்த மாதிரியான படங்கள் வரும்போது சமூக மாற்றம் ஏற்படும். ‘பராசக்தி’ படம் தொடங்கி தற்போது பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் எல்லோரும் பிரமாதமான சமூக கருத்துகளை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் என்னதான் சென்சார் குழு சில வசனங்களை நீக்கி இருந்தாலும் சொல்லவேண்டிய கருத்துகள் மக்களிடம் போய்சேரும்” என்றார். இதை அருகில் அமர்ந்து கொண்டிருந்த திருமாவளவன், கை தட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.