லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் செய்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.
இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவித்தது. இதையடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிவித்தது.
முன்னதாக சத்யராஜ், இப்படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இதை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படக்குழு வெளியிட்ட போஸ்டரில் சத்யராஜ் இப்படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளது. சத்யராஜும் ரஜினியும் இணைந்து இதற்கு முன்னதாக தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.