
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நேற்று(02.04.2025) தொடங்கியது. ஏப்ரல் 6 வரை மொத்தம் 5 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இதில் முதல் நாளான நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைத்துறையில் இருந்து இயக்குநர்கள் சசிகுமார் மற்றும் ராஜூ முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சசிகுமார் நானும் ஒரு கம்யூனிஸ்ட்கள் தான் என பேசினார். அவர் பேசியதாவது, “இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நான் ஒரு படம் நடித்துக் கொண்டு வருகிறேன். அவர் ஒரு கம்யூனிஸ்ட். அதை அவர் சொல்லவில்லை. அவரின் எழுத்துக்களை பார்த்து நானே புரிந்து கொண்டேன். அவ்வளவு இயல்பாக என்ன சொல்லனுமோ அப்படி அவரது எழுத்துகள் இருந்தது. ஆனால் அது சென்சாரில் எத்தனை கட் வரும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அதை பேசுகிற தைரியம். அது எல்லா கம்யூனிஸ்டுகளிடமும் இருந்திருக்கு. அதை நான் பார்த்திருக்கிறேன்
என்னுடைய அயோத்தி, நந்தன் ஆகிய படங்களை பார்த்துதான் இந்த மாநாட்டிற்கு அழைத்ததாக சொன்னார்கள். அப்படிஎன்றால் அந்த படங்களில் நானும் கம்யூனிசம் பேசியிருக்கிறேன் என்று அர்த்தம். முதலில் நந்தன் படத்தை பார்த்துவிட்டு தோழர் பாலகிருஷ்ணன் என்னை அழைத்து பாராட்டினர். அதை மறக்கவே மாட்டேன். அவர் பாராட்டியதோடு அவர் சொன்ன விஷயங்கள் மறக்காது. பஞ்சாயத்து யூனியன்களில் இன்னும் கொடு ஏத்த முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நேரில் பண்ணுகிற வெளியில் சொல்ல முடியாத விஷயத்தை நீங்கள் படம் மூலம் சொல்லியிருக்கீங்க, அது ஜனங்களுக்கு போய் சேர்ந்திருக்கு. அதனால் இந்த படம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்றார். அதை கேட்கும் போது நாங்களும் சரியான விஷயத்தை தான் படத்தில் சொல்லியிருக்கிறோம் என புரிய வைத்தது.
சாதாரணமாக இருப்பவர்கள் தான் கம்யூனிஸ்ட் என சொல்வார்கள். அதனடிப்படையில் நானும் கம்யூனிஸ்ட் தான். மலையாளத்தில் நான் ஒரு படம் நடித்தேன். அதிலும் கம்யூனிஸ்ட்டாகத்தான் நடித்திருக்கிறேன். அதில் ஒரு கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்துக்கு ஆள் தேவைப்பட்ட போது இங்கு இருக்கிற சமுத்திரக்கனியைத் தான் கூப்பிட்டேன். இரண்டு பேரும் லால் சலாம் என்று சொல்வோம். என்னுடைய படங்களில் கம்யூனிஸம் பேசியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ” என்றார்.