மதுரை பழங்காநத்தத்தில் கடந்த 27 ஆம் தேதி நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவர், "நான் 70 வயதைத் தொடவுள்ளேன். ஆனால் இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். நான் இன்னும் 150 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். அந்த ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்னை முதல்வர் அரியணையில் ஏற்றினால் சொல்வேன்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் அசோக் செல்வனுடன் சரத்குமார் நடித்துள்ள 'போர் தொழில்' படம் வருகிற ஜூன் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சரத்குமார் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூட்டத்தில் பேசிய பேச்சு வைரலானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "ஒரு கூட்டத்தில் பேசும்போது, அங்கிருந்தவர்கள் ஏதாவது கருத்து சொல்வார் எனப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சுவாரசியமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று என் நண்பன் என்னுடைய வயதை சொன்னான். அதனால் நானும் வயது பற்றி சொன்னேன். ஆனால் அதுவே ஒரு பெரிய செய்தியாக வரும் போது ஆச்சரியமாக உள்ளது. ஒரு காமெடியாக கூட்டத்தில் இருப்பவர்களை உந்துதல் செய்வதற்காக அது பேசப்பட்டது. 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?" எனக் கூறினார். மேலும், "ஒரு கட்சியின் தொண்டர்கள் அவர்களின் தலைவரை முதலமைச்சராகப் பார்ப்பதற்க்கு ஆசைப்படுவார்கள். எனக்கும் அந்த ஆசை உண்டு. அதற்காக கண்டிப்பாக முயற்சி செய்வேன்" என்று பேசினார்.