கேரளாவில் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை தொடர்ந்து நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தெலுங்கு சினிமாவில் நடந்த பாலியல் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட கோரி பெண்கள் அமைப்பினர் வைத்த கோரிக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சமந்தா ஆதரித்திருந்தார். இதனிடையே ஹேமா கமிட்டி குறித்து ராதிகா பேசியிருக்க தற்போது சரத்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் சரத்குமார் பேசுகையில், “படப்பிடிப்பில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது. திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கமிட்டி உருவானது என்றால் அது ஹேமா கமிட்டிதான். அதன் பின்பு 2019ல் கேரள முதல்வரிடம் அந்த கமிட்டி ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் படப்பிடிப்பிலுள்ள சுகாதாரமற்ற சூழல் குறித்தும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் கூறியுள்ளனர். அதிலும் நடிகர்கள் பெயரை குறிப்பிடாமல் இது போன்ற சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து நடைபெறுவதாக வெளியில் சொல்ல முடியாமல் ஹேமா விசாரணை குழுவிடம் நடிகைகள் தெரிவித்திருக்கின்றனர். படப்பிடிப்பில் கழிவறை இல்லை என்கின்றனர். அப்படியே இருந்தாலும் அதிலுள்ள துளையில் கேமரா வைக்கும் அளவிற்கு இடம் இருக்கிறது. இது அந்த அறிக்கையில் 38வது பக்கத்தில் இருக்கிறது.
நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், அப்படி செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டியது அவர்களின் கடமை. என்னை பொறுத்த வரைக்கும் இது சினிமாவில் மட்டுமில்லை. அனைத்து துறையிலும் நடக்கிறது. இது பெண் காவலர்கள் தரப்பிலிருந்தும் கூட வந்திருக்கிறது. சமீபத்தில் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை பார்க்கும் போது எனக்கு எம்.ஜி.ஆர். பாடல்தான் நினைவுக்கு வருகிறது” என்று கூறிய அவர், ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...’ என்ற பாடலை பாடி பெண்கள் மதிப்பதை பற்றியும் ஆண்களை வளர்ப்பதை பற்றியும் கூறினார். அதைத் தொடர்ந்து அவர், “என் கவனத்திற்கு எந்த விதமான குற்றச்சாட்டு வந்தாலும் அதை உடனே விசாரிப்பேன். மற்றவர்கள் மாதிரி ‘அப்படியா பார்க்கிறேன்’ என்றெல்லாம் சொல்லமாட்டேன். நான் சாதாரண தலைவன் கிடையாது” என்றார்.