
சிம்பு தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சிம்புவின் 49வது படமாக உருவாகிறது. இதையடுத்து 50வது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதை முடித்துவிட்டு டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதில் சிம்புவின் 49வது படப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அறிவிப்பு போஸ்டர் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 3 அன்று வெளியானது. அதில் காலேஜ் பேராசிரியர் போல் பாக்கெட்டில் ஐ.டி. கார்டுடன் கையில் இஞ்சினியரிங் சம்பந்தப்பட்ட புத்தகத்தை பிடித்துக் கொண்டு சிம்பு திரும்பியடி நின்று கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த புத்தகத்தில் ரத்தக் கறையுடன் ஒரு கத்தி இடம்பெற்றிருந்தது. இதனால் காலேஜ் பேக்ட்ராப்பில் இப்படம் உருவாகுவதாக கூறப்பட்டது.
இதையடுத்து இப்படத்தில் டிராகன் பட பிரபலம் கயாடு லோஹர் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அவர் கதாநாயகியாக நடிப்பதாக தெரிகிறது. பின்பு இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபய்ங்கர் கமிட்டானார். இப்படி தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்க தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சந்தானம் இப்படத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக சந்தானம் இப்படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் நடித்து வந்த சந்தானத்தை சிம்புதான் வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார். பின்பு அவருடனும் பல்வேறு முன்னணி நாயகர்களுடனும் நகைச்சுவை நடிகராக நடித்து உச்சத்திற்கு சென்றார். ஒரு கட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை விட்டுவிட்டு ஹீரோவாக மட்டும் இனி நடிப்பதாக முடிவெடுத்து அதன்படியே படங்கள் நடித்து வந்தார். இந்த சூழலில் மீண்டும் சிம்புவுடன் சந்தானம் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சந்தானத்தின் கதாபாத்திரம் நகைச்சுவை கதாபாத்திரம் இல்லை என்றும் முக்கிய கதாபாத்திரம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தானம் இப்போது ஹீரோவாக ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்தை வைத்துள்ளார். இப்படம் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலரை சிம்பு இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே வேளையில் சிம்புவுடன் சந்தானம் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதால் சிம்பு 49வது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.