நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, அவரது படமான 'வினோதய சித்தம்' படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்துள்ளார். இதில் நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும், சாய் தரம் தேஜூம் நடித்துள்ளார்கள். ‘ப்ரோ’ என்ற தலைப்பில் கடந்த 28 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கவனித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலிலும் ரூ.100 கோடியை நெருங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தில் தன்னை கொச்சைப்படுத்தியதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அமைச்சர் அம்பதி ராம்பாபு தெரிவித்திருந்தார். அவர் பேசுகையில், "படத்தில் ஷியாம்பாபு என்ற கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரம் பவன் கல்யாண் கதாபாத்திரத்தால் அவமானப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இது போன்று தொடர்ந்து செய்தால் தக்க பாடம் புகட்டப்படும். அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், "பவன் கல்யாண் ஒரு என்.ஆர்.ஐ. அமெரிக்காவிலிருந்து அவருக்குப் பணம் வருகிறது. இது ஒரு பெரிய மோசடி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். சந்திரபாபு ஆட்கள், படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் மூலம் பவன் கல்யாணுக்கு உதவி செய்கிறார்கள். என்னிடம் இருக்கும் புள்ளி விவரங்களின் படி படம் படுதோல்வி அடைந்து வருகிறது" என்றார். அதோடு இப்படம் ஹவாலா பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் மத்தியப் புலனாய்வு அமைப்புகளிடம் புகார் அளிக்க நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் வி. விஜய் சாய் ரெட்டி மற்றும் எம்.பி.க்களை சந்திக்கிறார்.
இந்நிலையில் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில், "இந்த பண மோசடி குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஷியாம்பாபு கதாபாத்திரத்துக்கும் ராம்பாபுவுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை" எனத் தெரிவித்தார்.