
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைகிறது. இதில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் சல்மான் கான். அப்போது ஒரு செய்தியாளர், "உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்காகவே ஹாலிவுட்டில் இருந்து வந்திருக்கிறேன். உங்களை பார்த்த நொடியில் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்" என்றார். அதற்கு சல்மான் கான், "நீங்கள் ஷாருக்கானைப் பற்றி பேசுகிறீர்கள் அல்லவா?" என்றார். தொடர்ந்து அந்த செய்தியாளர், "நான் உங்களைப் பற்றி தான் சொல்கிறேன். நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?" என்ற கேள்விக்கு, "என்னுடைய திருமண நாட்கள் முடிந்துவிட்டன. நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் என்னை 20 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்திருக்க வேண்டும்" என்றார்.