கலைமாமணி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்பை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது அவர் ரஜினிகாந்த்தின் வாழ்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களைவும், கமலுடனான வணிக போட்டிகள் பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
அப்போது சபிதா ஜோசப் பேசுகையில், “கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்கும்போது போட்டியாக இல்லாமல் பவர் ஃபுல்லாக படங்கள் ஓடியது. அதே சமயம் கமல் விழித்துக் கொண்டார், இரண்டு பேர் சேர்ந்து நடித்தாலும் ஒரே சம்பளம்தான் என்று தனித்தனியாக நடிக்க இருவரும் முடிவெடுத்தார்கள். அதன் பிறகுதான் இருவருக்கும் போட்டி உருவாகிறது. அன்றைய காலத்தில் பொங்கல் வந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படம்தான் ஓடும், அது பயங்கர போட்டியாக இருக்கும். அதில் எம்.ஜி.ஆர். படம் நன்றாக ஓடும். அதேபோல் தீபாவளி பொங்கலுக்கு கமல் படமும் ரஜினி படமும் சேர்ந்து வர ஆரம்பித்தது. அதில்தான் போட்டி பெரிதாக தொடங்க ஆரம்பித்தது.
இந்த போட்டியில் ஒருபக்கம் கமலுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் படமும் மறுபக்கம் ரஜினிக்கு சந்திரமுகி படமும் வெளியானது. சந்திரமுகி 800 நாட்களுக்கு மேல் ஓடியது, ஆனால் கமல் படம் வாஸ் அவுட் ஆனது. அதேபோல் ஒரு வருடம் கமல் படம் நன்றாக ஓடும், மற்றொரு வருடம் ரஜினி படம் நன்றாக ஓடும். இப்படி இருக்கும்போது இருவரின் சம்பளமும் உயர்ந்துகொண்டே வந்தது. கபாலி படம் வரும்போது ரூ.350 கோடி வசூலானது. ஆனால் கமல் இதை முறியடிக்க முடியாமல் இருந்தார். ஆனால் இப்போதுதான் விக்ரம் படம் மூலம் ரூ.400 கோடி வசூல் செய்து அதை முறியடித்தார்.
ஆனால் விக்ரம் படத்தின் வசூலை, ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி முறியடித்தார். இப்படி இருவரின் படங்களிடையே இன்று வரைக்கும் சத்தமே இல்லாமல் வசூல் ரீதியாகவும் பிசினஸ் ரீதியாகவும் போட்டி நடக்கும். ஆனால் விஜய்க்கும் ரஜினிக்குமிடையே போட்டி என்பார்கள், அதெல்லாம் கிடையாது. முன்பு ரஜினிக்கு ‘ப்ரியா’ படத்தில் ரூ.1 1/4 லட்சமாக சம்பளம் வாங்கினார், ‘அடுத்த வாரிசு’ படத்திற்கு ரூ.7 லட்சம் வாங்கினார், முரட்டு காளை படத்திற்கு ரூ.15 லட்சம் வாங்கினார், அதன் பின் ‘மாப்பிள்ளை’ படத்திற்கு ரூ.40 லட்சம் வாங்கினார், ‘மன்னன்’ படத்தில்தான் ரஜினியின் சம்பளம் ரூ.1 கோடியாக மாறினது. இன்றைக்கு ரூ.300 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்” என்றார்.