Skip to main content

"அது யதார்த்தமா இருக்காதுன்னு நிக்க வச்சுட்டாரு" - ரிஸ்க் சம்பவத்தை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

rj balaji speech at  Run Baby Run Trailer Launch

 

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரன் பேபி ரன்'. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், "வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும், இதைச் செய்தால் தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என 3 படங்களுக்கு நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்குப் பிறகு நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

 

அதனால் நான் லக்‌ஷ்மண் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின் தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் வைக்க மாட்டேன். இதுதான் நான் 7 மாதங்கள் தொடர்பு கொள்ளாததற்கு காரணம். இந்தப் படத்தில் 33 வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்தக் காட்சியை நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை, அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி ஒன்று. அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம், சார், லாரி வருகிறதே என்று கேட்டதற்கு, ‘அதை நான் தான் அனுப்பினேன்’ எனச் சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.

 

அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார். படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்காக இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர்விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்து, நன்றாக இருக்கிறதா? என்று கூறுங்கள், அதை ஏற்றுக்கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களைக் கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துத்தான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன்" என்றார்.

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், "பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து, என்னைத் தொடர்பு கொண்டு ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா? என்று தெரியவில்லை என்றார்கள். அப்படியென்றால், நான் முதலில் கதை கேட்கிறேன் என்று கூறினேன். என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார். கதையையும், கதாபாத்திரத்தையும் விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்கு பிடித்துவிட்டது. அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது. அவருடைய பணியாற்றும் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் வசனம் உறுதியாக இருந்தது. ஆர்.ஜே.பாலாஜியுடன் எனக்கு முதல் படம். எனக்கு நிறைய அறிவுரை கூறியிருக்கிறார். இப்படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்