பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று (15.07.2024) வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போது படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கேரளா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் புரமோஷன் பணிகளை முன்னதாக தொடங்கிய படக்குழு, நேற்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தது. அதில் பா.ரஞ்சித், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது விக்ரம் பேசுகையில், “நான் கமர்ஷியல் படங்களிலும் யதார்த்தமுள்ள ராவான படங்களிலும் நடித்துள்ளேன். இதுபோன்ற இரண்டு ரக படங்களையும் ஏன் ஒன்றாக இணைக்கக்கூடாது என்றும் ரியலான யதார்த்தமுள்ள கமர்ஷியல் படத்தை ஏன் உருவாக்க கூடாது? என்றும் நினைத்துள்ளேன். அதற்கான பதில் தங்கலானில் இருக்கிறது. நீங்கள் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். கமர்ஷியல் என்றால் என்ன? காந்தாரா படம் கூட யதார்த்தமுள்ள கமர்ஷியல் படம்தான். எந்த வகையான படமாக இருந்தாலும் அது மக்களிடம் சென்றடைந்து ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்துத்தான் கமர்ஷியல் படமாக மாறுகிறது” என்றார்.
இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி விக்ரமுடன் எடுத்த புகைப்படத்தைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,“ஒரு நடிகனாக மாறுவதற்கான எனது பயணத்தில் விக்ரம் எப்போதுமே எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். 24 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நான் மிகவும் நேசிக்கும் மற்றும் மதிக்கும் விக்ரமை சந்தித்ததில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். என்னைப் போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, தங்கலான் படத்திற்கு வாழ்த்துக்கள். லவ் யூ விக்ரம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.