1995 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழக்கமான ரஜினி படங்களுக்கேயுரிய ஆர்ப்பாட்டங்களுடன் வெளியானது பாட்ஷா. அப்போது யாரும், ஏன் ரஜினியே கூட, நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், காலம் கடந்து நிற்கப் போகும், தன் புகழை, செல்வாக்கை, மார்க்கெட்டை புரட்டிப் போடப் போகும் படமாக இது மாறும் என்பதை! பல பேட்டிகளில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவே இதை தெரிவித்திருக்கிறார், ‘பாட்ஷா வெற்றியடையும் என்று நம்பினோம். ஆனால இப்படிப்பட்ட ஒரு வெற்றியை எதிர்பார்க்கவில்லை’ என. அவர் இப்படி சொல்லியே 15 வருடங்கள் ஆகிவிட்டது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றும் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது பாட்ஷா. வெளியான முதல் நாள் எப்படிப்பட்ட வரவேற்பும் உற்சாகமும் இருந்திருக்குமோ அதை 25 வருடங்களுக்குப் பிறகும் பாட்ஷா தக்கவைப்பது எப்படி?
சில ரசிகர்களைப் பார்த்து நமக்கு பொறாமை வரும். அப்படி நான் பொறாமை கொள்ளும் ரசிகர்கள், பாட்ஷா வெளியான போது படத்தை திரையரங்கில் பார்த்தவர்கள். தொலைக்காட்சியில் எண்ணற்ற விளம்பரங்களுக்கு நடுவில் பார்க்கும் நமக்கே பல காட்சிகளில் கத்தவேண்டும் போலிருக்கிறதே... தியேட்டரில், முதன்முறை பார்த்த ரசிகர்களுக்கு எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இருந்ததில்லை. பாட்ஷா கொடுக்கும் இந்த திரையனுபவம் தான் அதன் வெற்றிக்கான முதல் காரணம். படமாக, காட்சிகளாக பலமுறை பார்த்திருந்தாலும் நேற்று திரையரங்கில் பார்க்கும் போதும் அதே பரவசத்தை தருகிறது பாட்ஷா.
பாட்ஷா உருவான விதமே சுவாரசியமானது. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஹம் எனும் இந்திப் படத்தை லேசாய் தழுவியே பாட்ஷா எழுதப்பட்டிருக்கும். பாட்ஷாவின் இரண்டாம் பாதி முதல் பாதியாகவும், முதல் பாதி இரண்டாம் பாதியாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதாவது மும்பையை கலக்கும் டான் பாட்ஷா, தன் தம்பி தங்கைகளை காப்பாற்றுவதாக தந்தைக்கு வாக்கு கொடுக்கிறான். அது முதல் பாதி. கொடுத்த வாக்கின் படி சென்னையில் மாணிக்கமாக ஆட்டோ ஓட்டி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறான். இப்போது சிறையில் இருந்து வெளியே வரும் ஆன்டனி மாணிக்கத்தை கொல்ல முயல்கிறான். மாணிக்கம் அவனை வீழ்த்துகிறான். இது இரண்டாம் பாதி. கிட்டத்தட்ட இதுதான் ஹம் படத்தின் திரைக்கதை வடிவம். அதன் மிக புத்திசாலித்தனமான மற்றொரு வடிவம்தான் இப்போதும் நாம் பார்த்து கொண்டாடும் பாட்ஷா. இன்னொரு சுவாரசியம், ஹம் திரைப்படத்தில் ரஜினியும் நடித்திருப்பார். பாட்ஷாவில் ரஜினியின் தம்பியாக ஒருவர் வருவாரே.. கிட்டத்தட்ட அதேபோன்ற தம்பி பாத்திரத்தில். அமிதாப் பச்சன் தான் அண்ணன்.
ஆனால் பாட்ஷா உருவானது நேரடியாக ஹம் படத்தின் பாதிப்பிலிருந்து அல்ல. இன்னொரு சுவாரசியமான சம்பவத்தின் அடிப்படையில். ஹம் படப்பிடிப்பின் போது, அதன் இயக்குனர் முகுல் ஆனந்த் ரஜினியிடம் ஒரு காட்சியைப் பற்றி சொல்கிறார். அமிதாப் பச்சன் தனது இன்னொரு தம்பியான கோவிந்தாவுக்கு போலீஸ் வேலை வாங்கித் தர உதவுவது போல் இருக்கும் ஒரு காட்சி அது. பின்னர் அந்த காட்சி சரியாக வராது என்று அதை எடுக்காமல் விட்டுவிடுகிறார். ஆனால் ரஜினிக்கு அந்த காட்சி மிகவும் பிடித்துப் போகிறது. நிச்சயம் அதில் ஒரு திரைப்படத்திற்கான கரு இருக்கிறது என்று ரஜினிக்கு தோன்றுகிறது. அண்ணாமலை படப்பிடிப்பின் போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ரஜினி அந்த காட்சியைப் பற்றிக் கூற, அவருக்கு அது பிடித்துப் போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி அதுவே பாட்ஷாவாக உருவாகிறது. ஹம் படத்திற்காக உருவாக்கப்பட்டு, எடுக்காமல் போய், பாட்ஷா உருவாகக் காரணமான அந்த காட்சி எதுவென்று தெரிகிறதா? தன் தங்கைக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுக்க ரஜினி அந்த கல்லூரி முதல்வரிடம் பேசுவாரே.. ‘என் பேரு மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ அதே காட்சிதான்!
இப்படித்தான் உருவாகியிருக்கிறது பாட்ஷா. நேற்று படம் பார்க்கும் போது தோன்றிய இன்னொரு விஷயம், பாட்ஷா உருவாகுகையில் சம்பந்தப்பட்ட அத்தனை கலைஞர்களும் தங்கள் படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது. ரஜினி, சுரேஷ் கிருஷ்ணா, பாலகுமாரன், வைரமுத்து, தேவா, சண்டைப் பயிற்சியாளர் ராஜு, படத்தொகுப்பாளர் கணேஷ் குமார் என அனைவரும். அப்படியொரு நிறைவான கமர்ஷியல் படைப்பாக உருவாகியிருக்கிறது பாட்ஷா.
ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்து இரண்டாம் பாதியில் ப்ளாஷ்பேக் முடிந்து தங்கமகன் பாடல் முடிவதுவரை வேறெங்கும் கவனத்தை திருப்ப முடியாத திரைக்கதை. அதன் பின் நடப்பவை வழக்கமான க்ளைமேக்ஸ் தான் என்றாலும் அதற்கு முந்தைய இரண்டு மணி நேரங்கள் தந்த பரவசம போதும், பாட்ஷாவை மறக்க முடியாத படமாக மாற்றுவதற்கு.
அந்த இரண்டு மணி நேரத்தில் எந்தவொரு காட்சியும் கதைக்கு தேவையில்லாமல், கதையிலிருந்து விலகியில்லை. ரஜினிக்கான ஆரம்ப பில்டப்புகள், நான் ஆட்டோக்காரன் பாடல் முடிந்த பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும் கதையோட சேர்த்தே பிணைக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே ஒரு பெரும் வணிகப் படத்திற்கு தேவையான அத்தனை எமோஷன்களையும் கொண்டு வந்திருப்பதுதான் திரைக்கதையின் வெற்றி. வெவ்வேறு ஐடியாக்களில் உருவாக்கப்பட்ட பாடல்கள், கதையோடே பயணிக்கும் நகைச்சுவை, உணர்ச்சிமிகு தருணங்கள், ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், வசனங்கள், நல்ல திரைக்தை என தரமான ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனையையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது பாட்ஷா. அதனால்தான் இன்றும் கமர்ஷியில் படங்களுக்கான பெஞ்ச்மார்க்காக பாட்ஷா பார்க்கப்படுகிறது.
ஆரவாரமான ஆரம்பம், ஒரு அமைதியான ஆட்டோக்காரன், நாயகி என்று ஆரம்பிக்கும் திரைக்கதையில், முதன்முதலில் மாணிக்கத்திற்கு இன்னொரு முகம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் பரபரப்பு பற்றிக் கொள்ளும். அதன் பின் இடைவேளை வரை எப்போது வேண்டுமானலும் வெடிக்கக் கூடும் எனும் வகையிலான பில்டப்புகள் அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். ரஜினி டி.ஜி.பி யை போய் பார்ப்பது, ஆட்டோ உடைக்கப்படும் போது அமைதியாக இருப்பது, கோபப்படும் ஜனகராஜ் உள்ளிட்ட தனது கூட்டத்தை அமைதிப்படுத்துவது, படத்திற்கு அடித்தளமாக இருந்த ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ காட்சி, கேசவனை பார்க்கும் காட்சி, ஆனந்த்ராஜிடம் அடிவாங்கும் காட்சி என அத்தனையும் இந்த இடைவேளை காட்சியை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வெறியேற்றிவிட்டு, இடைவேளையில் அப்படியொரு காட்சியை வைக்கும் போது, அது பார்வையாளனை கத்திக் கொண்டாட வைத்து விடுகிறது. மிக சுவாரசியமான புத்திசாலித்தனமான ஒரு திரைக்கதை வடிவம் இது.
சின்ன சின்ன வசனங்கள், நடிவடிக்கைகள் கூட அந்த ஆர்வத்தை நமக்கு கூட்டிவிடும். உதாரணமாக, ஆட்டோ உடைபடும் போது, மாணிக்கத்தின் ஆட்கள் முன்னேறப் பார்க்கையில், மாணிக்கத்தின் ஒற்றைப் பார்வை அவர்களை அடக்கும். அப்போதுதான் அவர்கள் அத்தனை பேரும் மாணிக்கத்தின் ஆட்கள் என்பதே தெரியவரும். அதே போல், ஆனந்த் ராஜ் ரஜினியை கம்பத்தில் கட்டி அடித்து முடித்ததும், போலீஸ் தம்பி ரஜினியிடம் உங்களுக்கே கோபமே வராது என்று கேட்பார். அப்போது ரஜினி சிரிக்கும் அந்த சிரிப்பு, அத்தனை அர்த்தம் பொதிந்த தருணம். அதுவும் சுற்றி நிற்கும் தன் ஆட்களை பார்த்து சிரிப்பார். ‘நான் எப்படி இருந்த ஆள் தெரியுமாடா’ என்ற தொனி அதில் இருக்கும். ரஜினி முதல் அடியைப் பார்த்து அதிர்ந்து நிற்கும் தங்கையை, அம்மா உள்ளே அழைத்துக் கொண்டு செல்வதையும் உதாரணமாக சொல்லாம். ‘அவன் இறங்கிட்டான். நீ வந்துரு’ என்பது போன்ற தொனி அது. இது அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி ஆர்வமேறிப் போன ரசிகர்கள், இடைவேளைக் காட்சியில் ரஜினி அடிக்கும் அடியில் அடக்க முடியாமல் கூச்சல் போட்டு கொண்டாடுகின்றனர். அதற்கு அவர்களை தயார் செய்து வைத்தது அதற்கு முந்தைய காட்சிகள். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு உத்தியை தூள் படத்திலும் வேறொரு பரிமாணத்தில் பார்க்கலாம்.
இடைவேளையில் மாணிக்கத்தின் விஸ்வரூபத்தை காட்டிவிட்டு அத்தோடு விடாமல், அதற்குப் பின்னும் தொடர்கிறது இந்த வெறியேற்றும் உத்தி. மருத்துவமனையில் அடிபட்டு படுத்திருப்பவர்களைப் பற்றி போலீஸ் தம்பி மாணிக்கத்திடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் ரசிகர்களை உசுப்பேற்றுகிறது. கடைசியில், ஆரம்பத்தில் அவர்களை டீஸ் செய்து செய்து காத்திருக்க வைத்த அந்த ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது. அத்தனை நேர காத்திருப்பையும் நியாயம் செய்கிறது அந்த ஃப்ளாஷ்பேக்கின் வேகமும் வீரியமும். அது முடியும் போதே ரசிகன் மிக நிறைவான ஒரு அனுபவத்தை அடைந்திருக்கிறான். பாட்ஷா அடுத்து வரப்போகும் பல வருடங்களுக்கு அவனால் மறக்க முடியாத ஒரு படமாக மாறிவிடுகிறது.
இத்தனைக்கும் அந்த ஃப்ளாஷ்பேக்கிற்குள் ஒரு ஃப்ளாஷ்பேக் வரும். லாஜிக்கான கேள்விகள் எழும். ஆனால் அதை கேள்வி கேட்கும் நேரம் பார்வையாளனுக்கு இல்லை. குறைந்த நேரத்தில் சொல்லப்படும் விரிவான அந்த கதையை, அத்தனை சம்பவங்களை ஆர்வத்துடன் பார்க்கத் துவங்குகிறான். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஃப்ளாஷ்பேக்கிற்குள் வரும் அந்த குட்டி ஃப்ளாஷ்பேக் அப்படியே நாயகன் படத்தின் மறுபதிப்பு. நிலம் சார்ந்த ஒரு பிரச்சினை, தட்டிக் கேட்கும் நாயகன், ஒரு கட்டத்தில் கொலை செய்யுமளவிற்கு செல்கிறான், ஆனால் கொலையை மக்களே ஏற்றுக் கொள்ளும் அளவு ஆதரவு பெருகுகிறது, டான் ஆகிறான். இந்த கதைதான் அப்படியே பாட்ஷாவில் சொல்லப்பட்டிருக்கும். படத்தொகுப்பு உத்திகள் கூட நாயகனை ஒத்தே இருக்கும். ஒருபக்கம் பரபரவென்ற ஆக்ஷன் காட்சிகளும் இடையிடையே அமைதியான சவ ஊர்வல/காரியம் செய்யும் காட்சியும் நடக்கும். ஆனால் வேறொரு தளத்தில், வேறொரு விதத்தில் சொல்லப்பட்டதாலோ அல்லது கதையின் சுவாரசியமான ஓட்டத்தாலோ இந்த ஒப்பீடு எழாதது ஆச்சர்யமே.
இந்த அத்தனை காட்சிகள் நமக்கு ஏற்படுத்திய தாக்கங்களிலும் மிகப்பெரும் பங்கு தேவாவின் பின்னணி இசைக்கு உள்ளது. அதுவும் முதல் பாதி பில்டப்புகளில் ஒலிக்கும் அந்த தீம் ம்யூசிக் கேட்கும் போதெல்லாம் சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒன்று. தங்கை வெளியே நிற்க, ரஜினி ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்று சொல்லும் காட்சியை நினைத்துப் பாருங்கள். தானாக மனதிற்குள் அந்த இசை கேட்கத் துவங்கும். இப்படி பின்னணி இசையிலும், பாடல்களிலும் தேவா பட்டையை கிளப்பியிருப்பார்.
நேற்று திரையரங்கில் படம் பார்த்த கண்களை விட, பார்த்த ஃபோன்கள் அதிகம். வரப்போகும் முக்கியமான காட்சி தெரிந்திருப்பதால் அதை ஆரவாரத்தோடு படம்பிடிக்கும் ஆர்வத்தில் அவ்வப்போது ஃபோன்கள் வெளியே எடுக்கப்படுவதும் வைக்கப்படுவதுமாய் இருந்தன. ரஜினியின் அறிமுகக் காட்சியை என் ஃபோனும் படம் பிடித்திருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் படத்தை கூட்டத்தோடு ரசிக்கும், கத்திக் கொண்டாடும் ஆர்வமே முந்திக் கொண்டது. இப்படி ஒன்ற வைத்ததில் திரைக்கதையை குறிப்பிடுவதைப் போல நிச்சயம் ரஜினியையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கதைக்கருவை பிடித்ததில் துவங்கி, அவரது திரையாளுமை பாட்ஷாவின் கெட்டப், பஞ்ச் டயலாக், விதவிதமான ஐடியாக்களுடன் உருவாக்கப்பட்ட பாடல்கள் என படத்தின் அத்தனை பரிமாணங்களிலும் ரஜினியின் பங்கு இருந்திருக்கிறது. ரசிகர்களையும் தனது க்ராஃபையும் மிகத் தெளிவாக ஆய்ந்து நிர்ணயித்துக் கொண்ட ரஜினியின் புத்திசாலித்தனம் இது. 144 நிமிடங்களும் கண்கள் அவரை விட்டு அகலவேயில்லை. நேற்றைய அனுபவம் உணர்த்திய இன்னொரு விஷயம் ரஜினி பிறந்தநாளோ, பட வெளியீடோ ஒரு கொண்டாட்டம் அல்ல. ரஜினி என்பதே ஒரு கொண்டாட்டம் தான்!
பி.கு: பெரும்பாலும் இதுபோன்ற சிறப்புத் திரையிடல்களுக்கு பாட்ஷா படமே தேர்ந்தெடுக்கப் படுகிறது. ரஜினியின் மிகச்சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்றான அண்ணாமலை ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என தெரியவில்லை. அடுத்த நிகழ்வுக்கு அண்ணாமலை திரையிடப்பட்டால் FDFS பார்க்கும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குள் நுழைவேன்!