இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்திருக்கும் தி.மு.க. கூட்டணித் தலைவர், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள். அதே போல எனது நண்பர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் அவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும். மத்தியில் என்.டி.ஏ கூட்டணி மூணாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. மோடியும் மூணாவது முறை பிரதமராக பதவி ஏற்க போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்” என்றார். மேலும் இமயமலை பயணம் குறித்த கேள்விக்கு, “வருஷா வருஷம் போய்ட்டு வரும் இடம்தான். ஆனால் ஒவ்வொரு வாட்டியும் புதுப்புது அனுபவத்தை தரும்” என்றார்.
ரஜினிகாந்த் கடந்த மாதம் 29ஆம் தேதி இமயமலை பயணம் மேற்கொண்டார். தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், இம்முறையும் கேதர்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்றார்.