நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி சேவை என்ற அறக்கட்டளையின் மூலமாக ‘மாற்றம்’ என்ற பெயரில், கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரது முயற்சிக்கு எஸ்.ஜே சூர்யா வாழ்த்து தெரிவித்ததோடு லாரன்ஸுடன் இணைந்து தானும் சேவை செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த், லாரன்ஸின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் மாற்றம் என்ற பெயரில் முதற்கட்டமாக கஷ்டப்படும் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தேடிச் சென்று 10 டிராக்டர்கள் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அதன்படி முதல் ட்ராக்டரை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணன் என்பவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். பின்பு காஞ்சிபுரம் அக்கினம்பட்டு ஊரை சேர்ந்த பரமசிவம் குடும்பத்தினருக்கு ட்ராக்டர் வழங்கினார். பின்பு விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள விவசாயி ஒருவருக்கு வழங்கினார். இந்தனைத் தொடர்ந்து இன்று மயிலாடுதுறை தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு நான்காவது டிராக்டர் வழங்கினார். அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிய லாரன்ஸ், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், “டிராக்டர் வாங்கிவிட்டு சரியாக லோன் கட்ட முடியாமல் விவசாயிகள் இறந்துள்ளதாக செய்திகள் படித்திருக்கிறேன். அப்போதே ட்ராக்டர் கொடுக்க வேண்டும் என தோன்றியது. ஒரு குடும்பத்திற்கு கொடுப்பதை விட, அந்தப் பகுதியில் இருக்கிற நல்ல சமூக சேவகர் மூலம் கஷ்டப்படும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து, ஒருவர் மட்டும் பயன்படுத்துவதை தாண்டி, மீதமுள்ள நேரத்தில் மற்றவரக்ளும் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்” என்றார்.
அவரிடம் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “நண்பர் விஜய் அரசியலுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். மக்கள் அவர் மேல் ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் மக்கள் மீது ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளார். அவர் ஜெயிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.