நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் எனப் பயணித்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கிறார். மேலும் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து தனது ராகவேந்திரா புரொடைக்ஷன் சார்பில் உருவாகும் 2 படங்களை அறிவிக்கவுள்ளதாக சமீபத்தில் பகிர்ந்த அவர், பின்பு தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாகும் எனத் தெரிவித்தார். இதனிடையே விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லியிருந்தார். ஆனால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை என அப்படத்தின் இயக்குநர் தெரிவித்தார். திரைப்படங்களைத் தாண்டி மாற்றம் என்ற பெயரில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கினார்.
இந்த நிலையில் தனது தம்பி எல்வின் மற்றும் குடும்பத்தினரோடு திருப்பதி ஏழுமலைக் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு அங்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் லாரன்ஸ். அவர் பேசுகையில், “என்னுடைய தம்பி புல்லட் என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். அதனுடைய வசன காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இதில் நானும், ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். நல்லபடியாக முடிந்துவிட்டது. அதனால் தம்பியை அழைத்துக் கொண்டு ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கிறேன். அதே போல் நான் செய்து வரும் சமூக சேவை மாற்றம் பணிகளும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கும் சாமி தான் காரணம். அதனால் சாமிக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்” என்றார்.
பின்பு அவரிடம் விஜய் கட்சிக் கொடி அறிமுகம் செய்தது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் எனப் பெருமாளை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். அவரிடம் சண்முக பாண்டியன் படம் தொடர்பான கேள்விக்கு, “அந்த படத்தின் இயக்குநர் இது பற்றிப் பதிலளிப்பார்” என்றார்.