'ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' சார்பாக மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
நடிகர் ராதாரவி பேசியதாவது, “ரொம்ப நாளைக்குப் பிறகு ‘பகாசூரனில்’ வில்லன் வேடம் பண்ணியிருக்கேன். படத்தில் அருமையான கதைக்கருவை மோகன் ஜி எடுத்துள்ளார். அவர் எப்போதும் சமூக அக்கறை கொண்டவர். அம்பேத்கர் சாதித்தலைவர் அல்ல; பொதுத்தலைவர் என்று பேசியவர். இப்படத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் சிறந்த நடிகருக்கான விருதை பெருவது நிச்சயம். காட்சிகளில் நடிக்கும்போது அவரை வாடா போடா என்று பேசவேண்டும். ஆனால் அப்படி பேசியபோது எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. இந்தப்படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். நடிகர்களை தியேட்டரோடு விட்டுடுங்க... வீடு வரைக்கும் அழைச்சுட்டு வராதீங்க. இறுதியாக, இளைஞர்கள் தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீங்க" என்றார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசியதாவது, "இயக்குநர் மோகன் ஜி புரட்சியாளன். வித்தியாசமான சிந்தனை கொண்டவன். ஏற்கனவே இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ வித்தியாசமாக பேசப்பட்டு, அதன் பிறகு இந்தப்படம் வெளியாகிறது. இதுவும் வழக்கமான கதை அல்ல. இன்றைய சூழலில் வாழ்க்கையை புரட்டிப்போடும் கொடூரமான செய்தி. இந்தப்படத்தில் எனக்கு மிகப்பெரிய வேடத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். பெயரும் உயரத்திற்கு போய்விடும். இது பகாசூரன் அல்ல; பக்கா சூரன்" என்றார்.
இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ் பேசியதாவது, ”சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது 65 வயதுள்ள ஒரு அம்மா ‘என் அப்பன் அல்லவா’ பாடலை பாராட்டி பேசினார். ஆனால் அந்தப் பாடலை பாடியது நான்தான் என்று அவருக்கு தெரியவில்லை. கிறிஸ்துவனான நான் இந்தப் பாடலை பாடியது சிலருக்கு கேள்வியை ஏற்படுத்தியது. இசைக்கும் இசையமைப்பாளனுக்கும் மொழி, சாதி பேதம் கிடையாது. இந்த பாடல் உணர்ச்சிகரமாக இருந்து கடவுளுடன் பேசவைத்தால் ஒரு கலைஞனாக நான் பெருமைப்படுகிறேன். இந்தக் கதையை கேட்பதற்கு முன் மோகன் ஜி சாதி ரீதியிலான படங்களை எடுக்கும் இயக்குநர் என்று சொன்னார்கள். ஆனால் இது சாதி கதையல்ல. விழிப்புணர்வு இல்லாத தாய்மார்கள், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம்.” என்றார்.
செல்வராகவன் பேசியதாவது, "இங்கு திறமை இல்லாத யாரும் சதாரணமாக ஜெயித்துவிட முடியாது. மோகன் ஜி கடுமையான உழைப்பாளி, திறமைசாலி. சினிமா மீது அவ்வளவு மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கக்கூடிய நல்ல இயக்குநர். நேரம் காலம் பாராமல் படக்குழுவினர் உழைத்திருக்கின்றனர். நான் இயக்குநராக இருக்கும்போது ஓடிக்கொண்டே இருப்பேன். யாரையும் கவனிக்க, திரும்பிப் பார்க்க நேரம் இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் நடிகராக இருக்கும்போது பெரிய டெக்னீஷியன்ஸ், கலைஞர்கள் சாதாரணமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்" என்றார்.