நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தொடர்ந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ், மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் ஐயா, பசின்னு வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். அதனால் இனிமேல் மதியம் நானும் சாப்பாடு போட முடிவெடுத்துள்ளேன். 50 பேரிலிருந்து தொடங்குறேன். பசி என்று யாராவது வந்தால் கே.கே நகரில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் வந்து சாப்பிடலாம். அதற்காக ஆசீர்வாதம் வாங்க தான் இப்போது வந்தேன். கேப்டன் சாருக்காக என்னால் முடிந்தது இதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை கடைபிடிக்கவுள்ளேன்” என்றார்.