முகை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். எப்போதுமே வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் பேசும் தயாரிப்பாளர் ராஜன் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியதாவது “முகை என்பது மிக அருமையான ஒரு தமிழ் பெயர். இயக்குநரை நான் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்று தமிழ் சமூகத்தை நான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன். ஆயிரக்கணக்கான தலைப்புகள் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள். மொட்டுக்கும் மலருக்கும் இடையில் இருப்பது தான் முகை. எனக்கே இது புதிய தகவல். பலருக்கு இன்று அதன் அர்த்தம் தெரிந்துவிட்டது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு 3 லட்ச ரூபாய் மானியம் அறிவித்தார்.
அவருடைய அறிவிப்புக்குப் பிறகு தொடர்ந்து படங்களுக்கு தமிழில் நல்ல பெயர்கள் வைக்கப்பட்டன. இப்போது மீண்டும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கின்றனர். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது உங்களுடைய இஷ்டம். ஆனால் முடிந்தவரை தமிழில் தலைப்பு வைக்க முயற்சிக்க வேண்டும். நல்ல தமிழ் பெயர் வைத்த இயக்குநரை வாழ்த்துகிறேன். தயாரிப்பாளரை வாழ்த்துகிறேன். தமிழ் படங்கள் இன்று ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கின்றன. இளம் இயக்குநர்கள் நிறைய செலவு செய்தாலும் நல்ல படங்களை இயக்குகின்றனர். இந்தப் படம் வெற்றியடையட்டும்.” என்றார்.