மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜேம்ஸ் திரைப்படம், புனித் ராஜ்குமாரின் பிறந்த தினமான மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நடிகை பிரியா ஆனந்த், புனித் ராஜ்குமார் குறித்தும் ஜேம்ஸ் திரைப்படம் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.
"அனைவரும் பார்க்க விரும்பும் படமாக ஜேம்ஸ் இருக்கும். தியேட்டரில் விசில் அடித்து, டான்ஸ் ஆடி கொண்டாட்டமாக பார்ப்பதற்கான விஷயங்கள் படத்தில் உள்ளன. குறிப்பாக, ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
புனித் ராஜ்குமார் இன்று இல்லாதது மிகப்பெரிய இழப்பு. அவர்தான் உண்மையான ஹீரோ. திரையில் நாம் வியந்து பார்த்த நடிகர்களை நேரில் பார்க்கும்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதம் முற்றிலும் வேறாக இருக்கும். ஆனால், புனித் ராஜ்குமார் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பார். அவர் இறந்த பிறகுதான் அவர் செய்துகொண்டிருந்த பல நல்ல விஷயங்கள் தெரியவந்தன. அவருடன் இணைந்து இரண்டு படம் நடித்ததை பெரிய வரமாக பார்க்கிறேன். கர்நாடக மாநிலம், அந்த மக்கள், அந்த மாநில கலாச்சாரம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் புனித் ராஜ்குமார். நான் கற்றுக்கொண்ட முதல் கன்னட வார்த்தை, அவர் சொல்லிக் கொடுத்ததுதான்.
பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதாரண மக்களின் கஷ்டங்களை நன்கு புரிந்து வைத்திருந்தார். கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்கூட ஒரு கட்டத்தில் கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள். ஆனால், அவர் அப்படி இல்லை. நேரில் பார்த்தாலும் சரி, டீவியில் பார்த்தாலும் சரி, அவர் சிரிப்பதை பார்த்தால் நம்மால் பதிலுக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் சிரிப்பு இதயத்தில் இருந்து சிரிப்பதுபோல இருக்கும். திரைத்துறையில் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். அது மாதிரியான சாதனைகள் படைப்பதற்கு இன்னும் சில தலைமுறைகள் வரவேண்டும்.
ராஜகுமாரா படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தபோதுதான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். என்னிடம் கைகுலுக்கிவிட்டு நான் புனித் ராஜ்குமார் என்று எளிமையாக அவரை அறிமுகப்படுத்தினார். எல்லோருடனுமே அப்படித்தான் பழகுவார். அவர் தற்போது வேறொரு நாட்டில் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்". இவ்வாறு நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்தார்.