சென்னை கலைவானர் அரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எழுதிய 5 நூல்கள் வெளியிடும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எ.ஏ-க்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்களோடு நடிகர் பிரகாஷ் ராஜும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “இது ரொம்ப கம்பீரமான மேடை. ஆனால் பேச பயமா இருக்கு. ஏனென்றால் என்னுடைய குரல் அரசியல் குரல் இல்லை. கலைஞனின் குரல். ஆனால் பேசினால் அரசியல் ஆகிவிடுகிறது. இந்த மேடையில் நான் இருப்பது திருச்சி சிவா என்னுடைய நண்பர் என்ற காரணத்திற்காக இல்லை. கலைஞர் இருக்கிறவரைக்கும் என்னை போன்ற ஆட்கள் பேச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்பேர்பட்ட குரலோட தொடர்ச்சி தான் சிவாவின் குரல். உண்மையை பேச தைரியம் தேவையில்லை.
நம்ம ஊரில் திருடர்கள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை என பஸ்ஸில் ஒரு போர்டு இருக்கும். அது திருடர்களுக்கு வலிக்கும். அது மாதிரி எங்க மொழியை திருடாதே, அடையாளத்தை திருடாதே, தனித்துவத்தை திருடாதே என இங்கு இருக்கிறவர்கள் போர்டு போடனும். அது திருடனுக்கு வலிக்கும். வலிக்கட்டும்” என்றார்.
பின்பு துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நம்மகிட்ட இருக்கிற துணை முதலமைச்சர் சமத்துவத்தை பற்றி பேசுகிறார். ஆனால் இன்னொருத்தர் சனாதனத்தைப் பற்றி பேசுகிறார். நாங்கள் சமத்துவத்தோடு இருக்கிறோம்” என்றார். சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி சனாதனத்தை பற்றி முன்பு பேசியதை சுட்டிக்காட்டி அந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.