கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு ஆட்சியிலுள்ள பாஜக, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
இதில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் 3 சீட்டுகள் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை பாஜக களமிறக்கியுள்ளது.
இதனை காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில், "முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சைக் கேட்க யாரும் வராததால் பாஜகவினர் தற்போது சினிமா நட்சத்திரங்களை நம்பியிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டு பாஜகவை விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த கர்நாடக மாநில பாஜகவினர், "பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஒரு திரைப்பட நட்சத்திரம் சமூகநீதிக்கான கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை" என அவர்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கிச்சா சுதீப் பிரச்சாரத்திற்கு களமிறக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், "அன்புள்ள சுதீப்.. எல்லோராலும் விரும்பப்படும் கலைஞனாக.. மக்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் ஒரு அரசியல் கட்சியுடன் உங்களுக்கு ஒரு சாயம் பூசிவிட்டீர்கள். சரி.. பதில் சொல்லத் தயாராகுங்கள். உங்களிடமும் உங்கள் கட்சியிடமும் ஒரு குடிமகன் எல்லா கேள்விகளையும் கேட்பான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.