‘நமது மாஸ்டர் நம்ம முன்னாடி’ என்ற தலைப்பில் கடந்த மே 2ஆம் தேதி சர்வதேச நடனத் தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி நடன இயக்குநர் பிரபு தேவாவிற்கு அர்பணிக்கும் விதமாகவும், அவரது 100 பாடல்களுக்கு 5000 மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் நடன கலைஞர்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரபு தேவா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு ஒவ்வொரு சிறுவர் சிறுமிகளிடமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் மைதானத்தில் காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் 9 மணி கடந்தும் நிகழ்ச்சி தொடங்கப்படாததால், அங்கிருந்த பெற்றோர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். காலை உணவுக் கூட ஏற்பாடு செய்யாமல் உரிய நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்காமல் குழந்தைகளை வெய்யிலில் நிற்க வைத்ததாக கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு அவசர அவசரமாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சிறிது நேரத்திலே பிரபு தேவா, வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதியிலேயே அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பிரபு தேவா தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரமுடியாது என வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். மேலும் இன்னொரு நாள் கண்டிப்பாக தான் வருவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி இந்நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு திறந்தவெளி அரங்கத்தில் நேற்று (29.07.2024) மாலை நடைபெற்றது. இதில் பிரபு தேவா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இவரோடு நடன மாஸ்டர் ராபர்ட், நடிகர் ரோபோ ஷங்கரும் கலந்து கொண்டனர். சுமார் 1800க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். பின்பு 100 நிமிடங்களுக்கு 100பாடல்கள் என்ற அடிப்படையில், ஒவ்வொரு குழுவினராக நடனமாடினர். இதன் மூலம் தொடர்ந்து 100 நிமிடங்கள் 100 பாடல்களுக்கு நடனமாடி இண்டர்நேஷனல் ப்ரைடு வேர்ல்ட் ரெகார்ட் சாதனையை அவர்கள் நிகழ்த்தினர். அதற்கான சான்றிதழை பிரபுதேவா வழங்கி நடனமாடியவர்களை பாராட்டினார். மேலும் எந்த வாக்குவாதமும் நடக்காமல் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்தது.