நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, அவரது படமான 'வினோதய சித்தம்' படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்துள்ளார். இதில் பவன் கல்யாணும் சாய் தரம் தேஜூம் நடித்துள்ளார்கள். ‘ப்ரோ’ என்ற தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ள படக்குழு ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், சமீபத்தில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்துப் பேசினார்.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, "தமிழ்த் திரைப்படங்களில் தமிழகத்தில் உள்ள கலைஞர்களை, தொழிலாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை, தயாரிப்பாளர்களைப் பயன்படுத்த வேண்டும். தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பைத் தமிழகத்திலேயே நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். இயக்குநரே எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும். தயாரிப்பாளரையோ, திரைப்படத்தையோ அந்தப் பிரச்சனை பாதிக்கக் கூடாது" என சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இதனை மேற்கோள் காட்டிப் பேசிய பவன் கல்யாண், "தமிழ் சினிமா எப்படிக் குறிப்பிட்ட எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆனால், தெலுங்கு சினிமா அனைத்து மொழிப் பின்னணியில் இருந்தும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அரவணைத்துக்கொள்ள கதவுகளைத் திறந்திருக்கிறது. தமிழ்த் திரையுலகம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தொடர்ந்து தமிழர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்தால் குறிப்பிட்ட வளர்ச்சியையே தமிழ் சினிமா பார்க்கும். எல்லா இடங்களிலிருந்தும் புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பதால் தெலுங்கு திரையுலகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
தமிழிலிருந்து சமுத்திரக்கனி, மலையாளத்திலிருந்து சுஜித் வாசுதேவ், இந்தியிலிருந்து ஊர்வசி ரவுத்தேலா, பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த நீதா லுல்லா போன்றவர்கள் இங்கு பிரபலமாகிப் பெயர் பெற்றவர்கள். பல்வேறு மொழிகளில் இருந்து திறமையாளர்கள் ஒன்று சேர்ந்தால், அது அற்புதமான படமாக மாறும். எனவே குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களைத் தமிழ் சினிமா எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.