தமிழில் பிரஷாந்தின் 'மஜ்னு', அஜித்தின் 'ராஜா' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் நடிகர் சோனு சூட். தமிழைத் தாண்டி தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து அங்கு பிரபலமான ஹீரோவாக வலம் வருகிறார். கரோனா காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பலரது கவனத்தைப் பெற்றார்.
சோனு சூட் கடந்த மாதம் 13ஆம் தேதி ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவிற்கு வடக்கு ரயில்வே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் நீங்கள், ரயில் படிகளில் பயணம் செய்வது ஆபத்தானது, இந்த வகையான வீடியோ உங்கள் ரசிகர்களைத் தவறான போக்கில் அழைத்துச் செல்லும். தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள். சுமுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை அனுபவிக்கவும்" எனப் பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில் வடக்கு ரயில்வே பதிவிற்கு நடிகர் சோனு சூட் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , "மன்னிக்கவும். அங்கேயே அமர்ந்து இன்னும் ரயில் கதவுகளைக் கடந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த செய்திக்கும், நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.