வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் வடிவேலு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போது நடித்து வரும் படங்கள் இல்லாது விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருவதாக தெரிவித்தார். மேலும், "நிறைய படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். மாமன்னன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முன்பெல்லாம் படத்தில் காமெடிக்கு என்று ஒரு தனி ட்ராக் இருக்கும் அதனால் நிறைய பேர் நடிக்க முடிந்தது. ஆனால் இப்போது அது இல்லை. எல்லாரும் கதையோடு வருகிற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். விரைவில் வெளிவரும்." என பேசினார்.
அப்போது அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அரசியல் எதுக்கு இப்ப. நம்ம சினிமாவில் முதலில் நடிப்போம். மக்களை சிரிக்க வைப்போம். என்று கூறினார். மேலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போண்டா மணிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும் தெரிவித்தார்.